×

மாடம்பாக்கத்தில் 1500 ஆண்டு பழமையான தேனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தாம்பரம்: மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தேனுகாம்பாள் சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில், அருணகிரிநாதரால் பாடப்பெற்ற சிவன் ஸ்தலமாகும். கோயிலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பல்வேறு புனரமைப்பு பணிகள் நடந்தது. இதையொட்டி, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக, கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 29ம்தேதி தொடங்கி 7 நாட்கள் நடந்தது. முதல்நாள் காலை 8 மணிக்கு, ஸ்ரீ மிதந்த விநாயகருக்கு, பல்வேறு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. 7ம் நாளான நேற்று காலை 5.30 மணிக்கு, நான்காம் கால அவப்ருதயாக துவக்கம், விசேஷ பூஜை, யாகங்களும், காலை 8.30 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு என காலை 9.45 மணிக்கு தேனுபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. பின்னர் தேனுகாம்பாள், தேனுபுரீஸ்வரர் உள்பட அனைத்து கடவுள்களுக்கும் அலங்கார, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்குடை நன்னீராட்டு பெருவிழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், திமுக நிர்வாகிகள் பொன் சதாசிவம், ராஜாராம், விமலா, ரமாதேவி, செந்தில்குமார், பன்னீர்செல்வம், செல்வம், வழக்கறிஞர் கார்த்திகேயன், பெருமாள், மோகனரங்கன், பாரதி, சரஸ்வதி, ஒலியரசு, பரமேஸ்வரி உள்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து, இரவு 7 மணியளவில் திருக்கல்யாண மகோத்சவம், சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை பகுதி செயலாளர் மாடம்பாக்கம் நடராஜன், சேகர், ஜெயராமன், ராஜேந்திரன், லோகநாதன், கோகுலன், சாம்சன், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி, பதுவஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post மாடம்பாக்கத்தில் 1500 ஆண்டு பழமையான தேனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Thenupuriswarar Temple ,Madambakkam ,Tambaram ,Thenupureeswarar temple ,Minister ,Thamo Anparasan ,
× RELATED தேவங்குடி கோதண்ட ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்